தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருந்ததி ராய் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கக் கோரி மனு

திருநெல்வேலி: அருந்ததிராய் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்காவிட்டால் பல்கலைக்கழகம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என துணைவேந்தரை சந்தித்த பிறகு அனைத்து கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

By

Published : Nov 17, 2020, 1:39 PM IST

அனைத்து கட்சி நிர்வாகிகள் சார்பில் பேட்டி
அனைத்து கட்சி நிர்வாகிகள் சார்பில் பேட்டி

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆங்கில முதுகலை பாடப்பிரிவில் மூன்றாவது பருவ பாடத்தில் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய 'வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்' என்ற கட்டுரை இடம் பெற்றிருந்தது. பாஜக மாணவர் அமைப்பினரான ஏபிவிபி அளித்த புகாரின் அடிப்படையில் திடீரென, இந்த கட்டுரையை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு சாராத ஒரு அமைப்பினர் கொடுத்த புகாரின் பேரில் துணைவேந்தர் தன்னிச்சையாக முடிவெடுத்து கட்டுரையை நீக்கியிருப்பதாக கடும் கண்டனம் எழுந்தது. அருந்ததி ராய் கட்டுரையை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கக் கோரி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகள் இன்று (நவ.17) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியிடம் மனு அளித்தனர்.

அப்போது திமுக சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சியினர் இருந்தனர்.

அனைத்து கட்சி நிர்வாகிகள் சார்பில் பேட்டி

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமணன் பேசுகையில், "மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை பாடத்திட்டத்தில் நீக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. எனவே மீண்டும் உடனடியாக பாடத்திட்டத்தில் அந்தக் கட்டுரையை சேர்க்க வலியுறுத்தி துணைவேந்தரை சந்தித்தோம். கட்டுரையை சேர்க்காவிட்டால் பல்கலைக்கழகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.

பாரம்பரியமான இந்தப் பல்கலைக்கழகத்தில் சில விஷக் கிருமிகள் சதியால் இதுபோன்று சமூக நீதி சீர்குலைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இங்கு பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. அதையும் வெளிக்கொண்டுவர கமிஷன் அமைக்க வலியுறுத்துவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அருந்ததிராய் கட்டுரை நீக்கப்பட்ட விவகாரம்: துணைவேந்தர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details