திருநெல்வேலி: நாங்குநேரி அருகே உள்ள தளபதிசமுத்திரம் மற்றும் ராஜாக்கள் மங்களம் ஆகிய ஊராட்சிகளுக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட, அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான சுடுகாடு ஊருக்கு வெளியே நம்பியாற்றின் கரை ஓரத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில் சுடுகாட்டுக்கு செல்லும் பிரதான பாதையை மறைத்து, ராஜாக்கள் மங்கலம் ஊராட்சி சார்பில் வேலி போடப்பட்டுள்ளது, இதனால் அங்கு மற்றவர்கள் செல்ல வழியில்லாமல் சிரமப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தளபதிசமுத்திரம் மேலூரை சார்ந்த மூதாட்டி ஒருவர் காலமானார்.
அமரர் ஊர்தியில் உடலை எடுத்து கொண்டு வள்ளியூர்- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊர் மக்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது சுடுகாடு செல்ல வழியில்லாத ஆத்திரத்தில், மக்கள் திடீரென இறந்தவரின் உடலை நடுரோட்டில் வைத்து தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.
இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனகங்களும் நோயாளிகளுடன் சாலை மறியலில் சிக்கின. குறிப்பாக மாலை நேரம் என்பதால் வள்ளியூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தன.