திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் தொடக்கத்தில் இரண்டு வாரங்களாகத் தொடர் மழை பெய்தது. குறிப்பாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்துவருவதால், மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.
அணைகளை நம்பித்தான், நெல்லையில் சுமார் 86 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறுகின்றது. பருவமழை உரிய நேரத்தில் பெய்தால்தான் விவசாயிகள் கவலை இல்லாமல் உழவுசெய்ய முடியும். ஆனால், இந்தாண்டு பருவமழை விவசாயிகளுக்குப் பலன் கொடுக்கவில்லை. இருப்பினும் பஞ்சம் ஏற்படாத வகையில் அவ்வப்போது மிதமான மழை பெய்துவருகிறது. இந்த மாதம் நேற்று (டிசம்பர் 16) வரை மாவட்ட முழுவதும் சராசரியாக 112 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், புரெவி புயல் காரணமாக நெல்லை மாவட்டத்தில் அதிக மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புயலின் வேகம் குறைந்து திசை மாறியதால் நெல்லையில் புயலால் போதிய மழை பெய்யவில்லை. பத்து நாள்களுக்கு மேலாக நெல்லையில் மழை பெய்யாத நிலையில், கடந்த இரு தினங்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனால் பாபநாசம் அணை தற்போது முழுக் கொள்ளளவை எட்டி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முழு கொள்ளவை எட்டிய பாபநாசம் அணை அதாவது 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில், டிசம்பர் 16ஆம் தேதி காலை நிலவரப்படி 140.80 அடி நீர்மட்டம் இருந்தது. வினாடிக்கு 1262.73 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த சூழ்நிலையில், மாலையில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியது மட்டுமின்றி 142 அடியைத் தாண்டியுள்ளது.
இதையொட்டி, பொதுப்பணித் துறை அலுவலர்கள் அணைப் பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர். அணையைச் சுற்றிலும் கடல்போல் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இந்தாண்டு முதல் முறையாக பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.