திருநெல்வேலி:இரட்டை நகரம் கொண்ட நெல்லை சந்திப்பு பகுதியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பாலம், ஆசியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையையும் கொண்டதாகும். புகழ் பெற்ற இந்த மேம்பாலம் நெல்லை மாவட்டத்தின் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எனவே, இந்த மேம்பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதன் பேரில் சில மாதங்களுக்கு முன்பு 2 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் பாலத்தை பராமரிக்க நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, அதற்கான பணிகளைப் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தொடங்கி வைத்தார். இந்த நிலையில், நெல்லை மாநகரில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவர், ஈரப்பதம் காரணமாக இடிந்து விழுந்துள்ளது.