திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
அணைகளில் உபரி நீர் வெளியேற்றம்
கிட்டத்தட்ட 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் கனஅடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 4 நாட்களாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைந்துவருகிறது. இதனால் ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து 5740 கன அடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து 1995 கன அடியும், தென்காசி மாவட்டம் கடனா அணையிலிருந்து 512 கனஅடியும், ராமா நதியிலிருந்து 140 கண்ணாடியும் என மொத்தம் 8347 கனஅடி தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆறு மெல்ல அதன் இயல்புநிலைக்கு திரும்பி வருவதால் பொதுமக்கள் ஆற்றின் கரையோரத்தில் குளிக்கவும், துணி துவைக்கவும் தொடங்கியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதங்கள் நேரலாம் என்பதால் காவல் துறையினர் எச்சரிக்கைவிடுத்து அவர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.