திருநெல்வேலி:தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் அனைத்து அரசியல் கட்சியும் ஈடுபடத் தொடங்கியுள்ள நிலையில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும், அவர் 2021 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதற்காக அவ்வப்போது நெல்லையில், முகாமிட்டு பல்வேறு போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
இது உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கோபத்தை கிளப்பியுள்ளது. வெளியூர் நபரான ரூபி மனோகரன் போட்டியிட்டதால்தான் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததாகவும், இனி நாங்குநேரி தொகுதியில் உள்ளூர் நிர்வாகிகள்தான் போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (டிசம்பர் 15) தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வானமாமலை தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உடனடியாக மாவட்டத் தலைவரை நியமிக்கவேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கி அதில் உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கவேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும் என்ற மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.