ஊரடங்கால் சிறு, குறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தங்கத்தை நகையாக மெருகேற்றும் பொற்கொல்லர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஊரடங்கால் அவர்களின் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு நகையினை வடிவமைத்து, அதில் கல் பதிப்பது முதல் இறுதியாக அதனை அழகாக மெருகூட்டுவது வரை, அதன் உருவாக்கத்தில் பொற்கொல்லரின் பங்கு அதிமுக்கியமானது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பொற்கொல்லர்கள் உள்ளனர். ஊரடங்கால் நகைக்கடைகள் திறக்கப்படாததால் ஆர்டர்கள் ஏதும் இல்லாமல் வருமானமின்றி இவர்கள் தவிக்கின்றனர்.
தங்க நகைப்பட்டறையில் கப்பி பட்டறை, பொற்கொல்லர், நகை பாலிஷ் செய்வோர் எனப் பல்வேறு தொழிலாளர்கள் உள்ளனர். ஏற்கனவே விண்ணைத் தொடும் அளவு தங்க நகையின் விலை உயர்வால் இவர்கள் தொழில் சரிவடைந்துள்ள நிலையில், ஊரடங்கு இவர்களின் தொழிலை மேலும் மோசமாக்கியுள்ளதாகத் தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பங்குனி தொடங்கி ஆனி மாதம் இறுதிவரை சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும் இச்சமயத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வேலைவாய்ப்பு முற்றிலும் பறிபோயுள்ளதாகத் தொழிலாளர் புலம்புகின்றனர்.
ஊரடங்கால் வேலையின்றித் தவிக்கும் பொற்கொல்லர்கள் கடும் பொருளாதாரச் சிக்கலில் சிக்கித் தவிக்கும் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என இவர்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:'சாப்பாட்டிற்கே வழியில்லை; எங்க பொழப்பே போச்சு!' - ஊரடங்கால் தவிக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்