திருநெல்வேலி மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பாபநாசம் வனச்சரகத்திற்குட்பட்ட ஆலடியூர் வனக்காவல் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமமான கோரையார் குளத்துப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
கூண்டில் சிக்கிய பெண் சிறுத்தை
திருநெல்வேலி: பொது மக்களின் கோரிக்கையின்பேரில் வனத்துறையினரால் வைக்கப்பட்ட கூண்டில் இரண்டு வயது பெண் சிறுத்தை சிக்கியது.
அதன்படி சிறுத்தையைப் பிடிக்க முறையாக அனுமதி பெற்று, தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, தனிக்குழு ஒன்று அமைத்து சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து இன்று (செப் 12) சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தைக் கூண்டில் பிடிபட்டது.
இதுகுறித்து புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் பகுதி துணை இயக்குநர் கொம்மு ஓம்காருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவரது ஆலோசனைப்படி பாபநாசம் வனச்சரக அலுவலர் பாரத், முண்டந்துறை வனச்சரக அலுவலர் எம். சரவணகுமார், கால்நடை மருத்துவர் சிவமுத்து, வனகால்நடை ஆய்வாளர் அர்னால்டு, உயிரியலாளர் ஸ்ரீதர், முண்டந்துறை வனவர் ஜெகன், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள், வன கால்நடை மருத்துவக் குழு ஆகியோர் அடங்கிய தனிக்குழுவினர் பிடிபட்ட சிறுத்தையை முண்டந்துறை வனச்சரகத்திற்கு உட்பட்ட கன்னிக்கட்டி வனப்பகுதிக்குள் விட்டனர்.