தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 4, 2019, 7:37 AM IST

ETV Bharat / state

நெல்லை அருகே இரட்டை ரயில் பாதைக்காக நிலம் கையகம்- விவசாயிகள் முற்றுகை!

நெல்லை: முன்னீர்பள்ளம் மருதம்நகர் பகுதியில் எந்தவித முன்னறிவிப்புமின்றி இரட்டை ரயில்வே பாதைக்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

farmers_protest

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் மருதம் நகர் பகுதியில் ரயில்வே துறை சார்பில் இரட்டை ரயில் பாதை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்றுவருகிறது. இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்காமல் தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகக் கூறி நேற்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர், ரயில் பணிகள் நடைபெறாமல் நிறுத்தக்கோரி ரயில்வே பணி நடக்கும் இடத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். ரயில்வே துறை சார்பில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் இளங்கோவன் தலைமையில் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் அவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்குவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை செய்த பிறகு பணிகளை தொடங்குவதாகவும், உறுதியளித்த பிறகு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கும்போது, "இந்தப் பகுதியில் இரண்டு, மூன்று போக விளைச்சல் நடைபெற்றுவருகிறது. மேலும், இரட்டை ரயில் பாதை பணிக்காக விவசாயத்திற்கு பெரிதும் பயன்பெறும் கால்வாய்களை அடைத்தும் நிலங்களை கையகப்படுத்தி ரயில்வே நிர்வாகம் அராஜக போக்கில் ஈடுபடுகிறது.

கையகப்படுத்திய நிலத்திற்கு எங்களுக்கு எந்தவித நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால்தான் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களுக்கு முறையான நஷ்டஈடு வழங்காவிட்டால் மேலும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்" எனத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details