திருநெல்வேலி:மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பாபநாசம் அருகே காரையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது இஞ்சுக்குழி கிராமம். இங்கு காணி பழங்குடியினத்தை சேர்ந்த ஏழு குடும்பம் 100 ஆண்டுகளாக வசித்து வருகிறது.
இந்த கிராமத்தில் மின்சாரமோ, தொலைதொடர்பு வசதிகளோ கிடையாது. அத்தியாவசிய தேவைகளுக்காக 20 கிலோ மீட்டர் வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டும். குறிப்பாக காரையாறு அணையை கடந்தே டவுன் பகுதிக்கு செல்ல முடியும். இதற்கு அரசு சார்பில் படகு வசதிகளும் கிடையாது. இதனால் அந்த கிராம மக்களே மூங்கில் கம்புகளால் படகை உருவாக்கி சென்றுவருகின்றனர்.
இந்த கிராமத்தில் பிறந்த ஐயப்பன் என்பவர் எப்படியாவது தனது மகளை பட்டப் படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியத்தில் சிறு வயது முதலே தனது மகளை நகரில் தங்கி படிக்க வைத்தார். அதன்படி அவரது மகள் அபிநயா 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு மீண்டும் சொந்த கிராமத்திற்கு திரும்பினார். அதன்பின் கடந்தாண்டு கல்லூரியில் சேர முடிவெடுத்தார். இதற்காக பல்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்தார். இவரது கிராமத்தில் தொலைதொடர்பு வசதிகள் இல்லாததால், கல்லூரி சேர்க்கை தொடர்பான விவரங்களை செல்போன் மூலமாகவோ, ஈமெயில் மூலமாகவோ அறிந்து கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக கடந்தாண்டு கல்லூரியில் சேர முடியவில்லை. இந்தாண்டு எப்படியாவது மகளை கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என்ற விடா முயற்சியால் ஐயப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது மகளின் கல்விக்காக இஞ்சிக்குழியில் இருந்து கீழே இறங்கி காரையார் அணை அருகே சின்ன மைலார் என்ற பகுதியில் 3 மாதங்களாக தங்கி உள்ளனர். அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் செல்போன் சிக்னல் கிடைக்கும் என்பதால் அங்கிருந்தபடி கல்லூரி சேர்க்கை தொடர்பான விவரங்களை அறிந்து கொண்டுவந்தனர்.