திருநெல்வேலி:குருவனம் மற்றும் தமிழ்நாடு அரசின் கலை பண்பாடுத்துறை சார்பில் நெல்லை பாளையங்கோட்டை மேற்கு கோட்டை பூங்காவில் இயற்கை வண்ண ஓவியம் பயிலரங்கம் மற்றும் கண்காட்சி தொடக்க விழா இன்று (ஜூன் 27) நடைபெற்றது. இந்த விழாவை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு ஓவியம் வரைந்து பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். முன்னதாக ஓவியம் வரையும் பலகை முன்பு பல வண்ணங்களில் பெயிண்ட் வைக்கப்பட்டிருந்தது. சபாநாயகர் அப்பாவு ஆரஞ்சு நிற பெயிண்ட் பிரஸ்ஸை எடுத்து கனிமொழியிடம் வழங்கினார்.
அப்போது, கனிமொழி, "எடுத்த உடனே ஆரஞ்சு கலர் கொடுக்கிறீர்களே" என்று சிரித்தபடி கேட்டார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘அது பார்ப்பதற்கு காவி நிறம் போல் இருக்கிறது’ என்று கூறியதும் அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது. அதாவது காவி என்றால் தற்போது திமுகவின் அரசியல் எதிரியாக கருதப்படும் பாரதிய ஜனதா கட்சியின் கொடியின் நிறங்களில் ஒன்றாகும். எனவே கனிமொழி அது வேண்டாம் என்று கூறியுள்ளார்.
அதேபோல் அவருக்கு பிறகு அருகில் இருந்து சபாநாயகர் அப்பாவுவிடம் ஓவியம் வரைய சொல்லி அவரிடம் பிரஸ்சை கொடுத்தனர். அவரும் தயங்கியபடியே ஆரஞ்சு நிறத்தில் கை வைத்தார். ஆனால், பலகையில் ஓவியம் எதுவும் வராமல் கையை மட்டும் ஆட்டிவிட்டு, "இது தான் ஆர்ட்" என்று கூறி சிரித்துக்கொண்டே நைஸாக நிழுவி விட்டார்.