திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதற்காக திருநெல்வேலி ஜங்ஷன் பழைய பேருந்து நிலையத்திலிருந்து டவுன் காட்சி மண்டபம் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் மூன்று மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. சாலைகளில் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டது.
இதன் காரணமாக திருநெல்வேலி ஜங்ஷனில் இருந்து எஸ். என் நெடுஞ்சாலை வழியாக செல்லும் சாலை குண்டும் குழியுமாக பலத்த சேதம் அடைந்துள்ளது. குடிநீர் குழாய் பதிப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூடாததால் சாலை சின்னாபின்னமாகி உள்ளது.
தினமும் இந்த வழியாக பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. ஏற்கனவே சீர்குலைந்த சாலைகளில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் இந்த சாலைகள் மரணப் பள்ளங்களாக காட்சியளிக்கின்றன.
இதை போல் திருநெல்வேலியில் இருந்து அன்பை, தென்காசி செல்லவேண்டிய சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பிலும் குடிநீர் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு அதை சரிவர மூடாமல் விட்டுவிட்டனர். பள்ளம் தோண்டும்போது எடுக்கப்பட்ட மணல், கற்களை அங்கேயே குவித்துவைத்துள்ளனர்.
இதனால் வாகனங்கள் அங்கும் இங்கும் ஆடி அசைந்தபடி செல்கிறது. இதை பார்க்கும் சில வாகன ஓட்டிகள் பயந்து திரும்பி செல்வதை தினந்தோறும் பார்க்க முடிகிறது. சாலை சீர்குலைந்து காணப்படுவதால் இந்த வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக 108 ஆம்புலன்ஸ் அவசரத்திற்கு செல்லமுடியாமல் தாமதமாகிறது.