பாஜக கட்சியின் திருநெல்வேலி சட்டப்பேரவை சக்தி கேந்திர பொறுப்பாளர் கூட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், பாஜகவின் தமிழ்நாடு மேலிட பார்வையாளருமான சி.டி. ரவி கலந்துகொண்டு பொறுப்பாளர்களுக்கு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் எல். முருகன், மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, “தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட வெற்றிவேல் யாத்திரை வெற்றியடைந்துள்ளது. நம்ம ஊர் பொங்கல் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. மோடி தமிழ்நாட்டிற்கு ஐந்து லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மோடி மக்கள் மத்தியில் எப்போதெல்லாம் பேசுகிறாரோ? அப்போதெல்லாம் திருக்குறள் பற்றியும் பாரதி கம்பராமாயணம் பற்றியும் பேசுகிறார்.
வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும். தமிழ்நாடு முழுவதும் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் போட்டி அளவுக்கு பாஜக வலுவாக உள்ளது” எனக கூறினார்.