தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசாரணைக்கு ஆஜரான கைதிகளுக்கு போலீசார் மிரட்டல்? - நெல்லை பல்(பல்)வீர் சிங் விவகாரத்தில் பரபரப்பு!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பிடுங்கிய விவகாரத்தில், சார் ஆட்சியரின் விசாரணைக்கு ஆஜரானவர்களை மிரட்டி காவல்துறைக்கு ஆதரவாக போலீசார் பேச வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ASP pulling out the teeth of undertrials case been alleged who appeared for the hearing threatened to speak in favor police
விசாரணை கைதிகளின் பல்லை ஏஎஸ்பி பிடுங்கிய விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜரானவர்களை மிரட்டி காவல்துறைக்கு ஆதரவாக பேச வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

By

Published : Mar 28, 2023, 10:08 AM IST

திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் ஏஎஸ்பியாக பல்வீர் சிங் பணியாற்றி வந்தார். இவர் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், விகேபுரம் காவல் நிலைய பகுதிகளில் மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டவர்கள், கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்படுத்தியவர்கள் உள்ளிட்ட சிறிய குற்றங்களில் ஈடுபட்டு காவல் நிலையம் வருபவர்கள் இடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதோடு அவர்களை தாக்கியதாக தெரிகிறது.

குறிப்பாக வாயில் ஜல்லிகற்கள் போட்டு தாக்குதல் நடத்தி பற்களை புடுங்குவதை ஏஎஸ்பி வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிகிறது. ஒரே மாதத்தில் 15-ற்கும் மேற்பட்டவர்கள் ஏஎஸ்பியால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இது தொடர்பான சம்பவங்களை விசாரிக்க சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சமீர் ஆலமை விசாரணை அதிகாரியாக நியமித்தார்.

சார் ஆட்சியரின் விசாரணை நேற்று காலை துவங்கியது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு விபரங்களை விசாரணை அதிகாரி கேட்டுப் பெற்றுக் கொண்டார். அதோடு தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் நாட்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் கேட்டதாக தெரிகிறது. ஆனால் காவல்துறையினர் விசாரணையில் சிசிடிவி காட்சிகளை கொடுத்ததாக தெரியவில்லை.

நேற்று மாலை 6 மணி வரை விசாரணைக்கு காவல்துறை அதிகாரிகளோ, பாதிக்கப்பட்டவர்களோ ஆஜராகவில்லை. பிறகு இரவு பாதிக்கப்பட்ட லட்சுமி சங்கர் என்பவர் காவல்துறை பாதுகாப்போடு முகக்கவசம் அணிந்து விசாரணைக்கு வந்தார். ஒரு மணி நேரத்திற்கு மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஒருவரும் உடன் இருந்தார். முகக்கவசம் அணிந்தபடியே அவர் விசாரணை முடிந்து வெளியேறினார்.

இது குறித்து விசாரிக்கையில் ஏஎஸ்பி தாக்குதலில் தான் காயம் அடையவில்லை என அவர் விசாரணையில் கூறியதாக தெரிகிறது. காவல்துறைக்கு சாதகமாக விசாரணையின் போது பேச வைக்கும் பணிகளை காவல்துறையினர் காலையிலிருந்து கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் விசாரணை நடைபெற்ற சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்திலேயே முகாமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரியிடம் கேட்க முயன்ற போது அவர் பதில் ஏதும் அளிக்கவில்லை. காவல்துறை அதிகாரி மேல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சரி செய்வதற்கான முயற்சியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டது அப்பட்டமாக தெரியவந்தது. ஆனால் இது குறித்து விசாரணை அதிகாரி கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதனால் முறையான விசாரணை நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

விசாரணைக்கு அழைத்து சென்று காவல்துறை அதிகாரி பல்லை பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பில் நேதாஜி சுபாஷ் சேனை தலைவரும், வழக்கறிஞருமான மகாராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி விசாரணை என்ற அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வைத்து 14 பேர் வரை பல்லை பிடுங்கி உள்ளார். பல்லை பிடுங்கிய நபர்கள் அனைவருமே அப்பாவி பொதுமக்கள். கணவன் மனைவி சண்டை, சிசிடிவி கேமரா உடைத்தவர்கள் என சிறிய புகாரில் உள்ளவர்கள்.

ஏஎஸ்பி விசாரணை என்ற பெயரில் டிரவுஷர் மற்றும் கிளவுஸ் உடன் வந்து பாதிக்கப்பட்டவர்களை தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு புகார்களை அரசுக்கு தெரிவித்த நிலையில் ஏஎஸ்பி-யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இது போதாது. பொது மக்களை கொடூரமாக தாக்கிய ஏஎஸ்பி-யை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

விசாரணை அதிகாரிகளிடம் சாட்சி சொல்ல அனைவருமே பயப்படுகிறார்கள். காவல்துறையினர் சாட்சிகளை மிரட்டி வருகின்றனர். ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணையை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் இல்லங்களுக்கு காவல்துறை செல்லக்கூடாது. பாதிக்கப்பட்ட தரப்பைச் சேர்ந்த நபர்களின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம். சார் ஆட்சியர் தலைமையிலான விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை.

ஒரே நிலையிலான (நிர்வாக ரீதியான நிலை) ஒரே பகுதியில் பணி செய்து வரும் அதிகாரிகளை வைத்து இந்த சம்பவத்தில் விசாரணை நடத்துவது ஏற்புடையதாக இல்லை. சார் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்ற வேண்டும். சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படும் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை உடனடியாக கைப்பற்ற வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையத்தில் அம்பாசமுத்திரத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக புகார் தெரிவித்துள்ளோம்.

காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நபர்களை மறைமுகமாக மிரட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எங்களிடம் தெரிவித்தால் அனைவரையும் பாதுகாப்பான முறையில் நாங்கள் விசாரணை குழுவிடம் ஆஜராக செய்கிறோம். பாதிக்கப்பட்ட தரப்பு மக்களிடம் ஆலோசனை நடத்தி வரும் சனிக்கிழமை சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளையும் கண்டித்து அம்பாசமுத்திரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியைச் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர்” என தெரிவித்தார்.

விசாரணைக் கைதிகளின் பல்லைப் பிடுங்கிய விவகாரத்தை முதன் முதலில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு தான் வெளியே கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'கைதிகள் பல்லை பிடுங்கும் பல்பீர் சிங்' - நெல்லையில் நடந்த கொடூர சம்பவம்!

ABOUT THE AUTHOR

...view details