நெல்லை:நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் அப்துல் வகாப். இவர் பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இந்த நிலையில் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அப்துல் வகாபை திமுக தலைமை கழகம் நீக்கியுள்ளது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், 'நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் டிபிஎம் மைதீன் கான் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார். அப்துல் வகாப் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னணியை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்...
நெல்லை மத்திய மாவட்ட திமுகவில், மாநகர திமுக நிர்வாகிகள் ஒரு அணியாகவும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலை ராஜா தரப்பினர் ஒரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மைதீன் கான் மாலை ராஜா அணியைச் சேர்ந்தவர். அப்துல் வகாப் தனக்கு கீழ் செயல்பட்டு வரும் பெரும்பாலான நிர்வாகிகள் உடன் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தார். குறிப்பாக, அவரால் மாநகர திமுக செயலாளராக நியமிக்கப்பட்ட சுப்ரமணியன் தனியாக செயல்பட்டு வருகிறார் . எனவே, பொது நிகழ்ச்சிகள் மற்றும் பொது இடங்களில் அப்துல் வகாப் ஆதரவாளர்கள் மாநகர திமுக செயலாளர் ஆதாரவாளர்களை மிரட்டும் சம்பவமும் நடந்தது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலின் போது முன்னாள் மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் ஆதரவால் கவுன்சிலரான சரவணன், நெல்லை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம், மேயரான பிறகு அப்துல் வகாப் அவரை வெளிப்படையாக மிரட்டி தனக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று கூறியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், மேயர் சரவணன் வீட்டு ஆவணங்களை வாங்கி வைத்துக் கொண்டு மிரட்டியதாகவும் கூறப்பட்டது. எனவே, மேயர் சரவணன் அப்துல் வகாப்பின் எதிரணியான மாநகர திமுக செயலாளர் சுப்ரமணியன் உடன் இணைந்து செயல்பட தொடங்கினார்.
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அப்துல் வகாப், தனது ஆதரவு கவுன்சிலர் மூலம் நெல்லை மாநகராட்சி மாமன்ற கூட்டங்களில் தொடர்ச்சியாக, மேயருக்கு எதிராக பிரச்னையை கிளப்பி வந்தார். மேயர் சரவணன் தனக்கு வேண்டிய திமுக நிர்வாகிகளை மேயர் அறையில் வைத்துக் கொண்டு ஒப்பந்ததாரர்களுடன் கமிஷன் கேட்பதாகவும், அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டினர்.
மேலும், மேயரை மாற்றக் கோரி துணை மேயர் ராஜூ உள்பட அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் சமீபத்தில் திருச்சியில் அமைச்சர் கே.என். நேருவை சந்தித்து முறையிட்டனர். ஆளுங்கட்சி கவுன்சிலர்களே ஆளுங்கட்சி தலைமையால் நியமிக்கப்பட்ட மேயரை மாற்றக் கோரி பிரச்னை செய்து வந்தது, திமுக தலைமைக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது.