தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பத்ரகாளிபுரம் பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவரது மனைவி ராஜேஸ்வரி (33). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் இயற்கை முறையிலான சோப்பு, ஷாம்பூ உள்ளிட்ட பொருள்களை தயார் செய்து இணையதளம் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வருகிறார்.
முகநூலில் தொல்லை
கடந்த ஒராண்டிற்கு முன்பு முகநூலில் தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவரை ராஜேஸ்வரி லாவகமாகப் பேசி காவல் துறையினரிடம் பிடித்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜேஸ்வரியின் தோழி ஒருவருக்கு தேனியைச் சேர்ந்த ஆசாமி ஒருவர் முகநூல் வழியாக ஆபாசமாகக் குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை தருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
ஆபாச படம்
இதைத் தொடர்ந்து, இளைஞரின் ஆர்டிஸ் பாண்டி என்ற முகநூல் ஐடியில் ராஜேஸ்வரியும் குறுஞ்செய்தி அனுப்ப, இளைஞரும் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளார்.
தர்ம அடி
ஒரு கட்டத்தில் உங்களை நேரில் பார்க்க வேண்டும், எனது ஊருக்கு வருமாறு ராஜேஸ்வரி இளைஞருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். குறுஞ்செய்தி அனுப்பிய 30 நிமிடத்தில் அந்த இளைஞர் பத்திரகாளிபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த இளைஞரை கையும் களவுமாகப் பிடிக்க ராஜேஸ்வரி தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் உப்புக்கோட்டை பகுதியில் தயாராக இருந்த நிலையில், அங்கு வந்த இளைஞரை அவர்கள் லாவகமாக பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.
பின்னர் அந்த இளைஞர் தெரியாமல் செய்துவிட்டேன், இனிமேல் தவறு செய்யமாட்டேன் என காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறியுள்ளார். பிடிபட்ட இளைஞர் தேனி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி (24) என்பதும், இதுபோல் பல பெண்களுக்கு முகநூல் மூலம் ஆபாச படங்கள் அனுப்பி தனது கைவரிசையை காட்டியுள்ளதும் தெரியவந்தது.
வைரல் காணொலி
இதையடுத்து, இளைஞரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை காவல் துறையினரிடம் ஒப்படைக்காமல் எச்சரித்து அனுப்பியுள்ளனர். சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பும் இது போன்ற ரோமியோக்களுக்கு பத்ரகாளிபுரத்தைச் சேர்ந்த பெண் செய்த செயல் ஒரு பாடமாக அமைந்துள்ளது. தற்போது இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
இளைஞருக்கு தர்ம அடி கொடுக்கும் பெண் இதையும் படிங்க:வெளி மாநில பெண்ணை முகநூலில் காதலித்து திருமணம் - இளைஞர் தற்கொலை!