தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலில் வணிகர்கள் ஆதரவு யாருக்கு? - விக்கிரமராஜா விளக்கம்!

தேனி: தேர்தல் நேரத்தில் ஓசை இல்லாமல் யாருக்கு ஆதரவு என்பதை தெளிவுபடுத்துவோம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

vikramaraja
vikramaraja

By

Published : Dec 23, 2020, 6:43 PM IST

தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 6ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (டிச.23) நடைபெற்றது. தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இவ்விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார்.

எண்ணெய் வித்து உற்பத்தியில் மோசடி

பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், "எண்ணெய் வித்து பொருள்களை பேக்கிங் செய்யப்பட்ட சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. ஆனால், செக்கு எண்ணெய்கள் அனைத்தும் அவ்வாறு விற்பனையாவதில்லை. தமிழ்நாடு அரசு தரமற்ற முறையில் எண்ணெய் வித்து பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை துறைசார்ந்த அலுவலர்கள் மூலம் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பாதிப்பு

தேனியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட உள்ளதால் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் சிரமத்திற்குள்ளாவார்கள். ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் தொடங்கப்பட்ட பணிகள் மூன்று ஆண்டுகளாகியும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் என்னவானது என்று அரசு சிந்தித்து பார்க்கவில்லை.

'வணிகர்கள் கட்சி தொடங்கமாட்டோம்'

அண்டை மாநிலமான கேரளாவில் சாலை விரிவாக்கம் செய்தால் அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்குவதை போல தமிழ்நாட்டிலும் வியாபாரிகளுக்கு உதவிட அரசு முன்வர வேண்டும். யார் யாரெல்லாமோ அரசியல் கட்சி தொடங்குவதால் நாங்கள் (வணிகர்கள்) அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை. தேர்தல் நேரத்தில் ஓசை இல்லாமல் யாருக்கு ஆதரவு என்பதை தெளிவுப்படுத்துவோம்" என்றார்.

இதையும் படிங்க:திருநெல்வேலியில் நக்சலைட் தலைமையில் சமூக நீதி மாநாடு? - இந்து முன்னணியினர் புகார்

ABOUT THE AUTHOR

...view details