தேனி மாவட்டத்தில்கடந்த ஆண்டு இந்தியாவில் கரோனா தொற்று முழுமையாக ஒழிய வேண்டி ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து, கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாக ஒற்றைக் காலுடன் ஒற்றை ஆளாக சென்ற மாற்றுத்திறனாளியான சுரேஷ், இந்த ஆண்டு ஐயப்பன் மீது கொண்டுள்ள பக்தி காரணமாக தேனி மாவட்டம் கம்பம் நகரில் இருந்து சபரிமலைக்கு பாதயாத்திரையாக செல்லத் தொடங்கினார்.
கேரள மாநிலத்தில், உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோயில் உலகப்புகழ்பெற்ற மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாகும். இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டும் அல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்கச் செல்வது உண்டு.
இக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் வாகனத்தில் செல்வது மட்டுமல்லாமல், சில ஐயப்ப பக்தர்கள் இறைவனை வேண்டி பாதயாத்திரையாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சபரிமலைக்குச் செல்வதும் வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் நலமுடன் இருக்க வேண்டியும், கரோனா தொற்று இந்தியாவில் முழுமையாக ஒழிய வேண்டும் என்றும் சபரிமலை ஐயப்பனை வேண்டி, ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டருக்கும் மேல் இரு மாநிலத்தைக் கடந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பாதயாத்திரையாக ஒற்றைக் காலுடன் தனியாக மாற்றுத்திறனாளியான, சுரேஷ் பயணம் மேற்கொண்டு, சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தார்.