தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேனிக்காக எதையும் செய்யவில்லை ஓபிஎஸ்' - தங்க தமிழ்செல்வன் குற்றச்சாட்டு

தேனி: " தேனி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கு ஓ.பன்னீர்செல்வமே காரணம்" என்று, தங்கதமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

தங்கதமிழ்செல்வன்

By

Published : Mar 24, 2019, 6:51 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் தேனி தொகுதிக்கு தங்கதமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு கதிர்காமு, ஜெயக்குமார் ஆகியோர்களை வேட்பாளர்களாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. வேட்பாளர்களாக அறிவித்த பின்னர், தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த அவர்களுக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தேனியில் செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ்செல்வன் கூறுகையில்,

அமமுக சார்பில் போட்டியிடும் எங்களுக்கு சின்னம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் வருகிற 25ம் தேதி தீர்ப்பு வருகிறது. சின்னமே இல்லாத நிலையிலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் வேட்பாளர்களாக நிற்பதற்கு கட்சியினர் தாமாகவே முன்வந்து ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு காரணம் அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறப்போகிறோம்.

இன்றைய அரசியல் களத்தில் புதிய தலைமையை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அமமுக வளர்ச்சி அடைந்து தற்போது பலமான கட்சியாக உருவெடுத்துள்ளது. அதிமுக தொண்டர்கள் 90 விழுக்காடு பேரும், பொதுமக்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது. இதுதவிர அனைத்து மதத்தினரும் எங்களை ஆதரிக்கின்றனர்.

தேனியில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றாத ஓபிஎஸ் - தங்கதமிழ்செல்வன்

கடந்த 25 ஆண்டுகளாக முதலமைச்சர், அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்தார். அவரிடம் 10க்கும் மேற்பட்ட துறைகள் இருந்தன. ஆனால் அந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டிய இடத்தில் இருந்த ஓபிஎஸ் தொடர்ந்து தேனி, ஆண்டிபட்டி தொகுதியை புறக்கணித்து வந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் நான் வெற்றி பெற்றவுடன், தொகுதியில் நிலுவையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவேன்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details