தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் உள்ள கருமாரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). முந்திரி வெட்டும் கூலித் தொழிலாளியான இவருக்கு செல்வராணி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள முருகன் (50) என்பவருக்குச் செந்தமான வீட்டை ரூ. 80 ஆயிரத்துக்கு ஒத்திக்கு எடுத்து வசித்துவந்துள்ளனர்.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பு வீட்டின் ஒத்தி காலம் முடிந்து வேறு ஒரு வீட்டிற்கு குடியேறுவதற்காக சிவக்குமார் வீடு பார்த்து வந்துள்ளார். அதன் காரணமாக வீட்டின் உரிமையாளர் முருகனிடம் தொடர்ந்து வீட்டிற்கு ஒத்திக்குக் கொடுத்த பணத்தினை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், முருகன் பணத்தைக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, மனைவி, குழந்தைகள் மாமியார் வீட்டில் தங்கவைத்து விட்டு, சிவக்குமார் மட்டும் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகே முருகனிடம் பணத்தை சிவக்குமார் திருப்பிக்கேட்டபோது, இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் தகராறு முற்றி ஆத்திரமடைந்த முருகனும் அவரது மனைவியும் வீட்டில் இருந்தக் கத்தியை எடுத்து சிவக்குமாரை சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படுகிறது.