கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா பாதிப்பின் அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து அம்மாநில அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் பிரிட்டன் நாட்டிலிருந்து கடந்த 3ஆம் தேதி 18 பேர் அடங்கிய குழு ஒன்று மூணாறுக்கு சுற்றுலாவிற்கு வந்தனர். இவர்களில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து சம்பந்தப்பட்டவருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், அந்த குழுவினர் யாருக்கும் தெரியாமல் அவர்கள் தங்கிருந்த அறையிலிருந்து வெளியேறி எர்ணாகுளம் விமான நிலையத்திற்குச் சென்றனர்.
இதனிடையே இவர்களைப் பற்றிய தகவல்கள் விமான நிலைய அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமான நிலையத்திருந்த 18 பேரும் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவர் அங்குள்ள மருத்துவமனையில் உடனே அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மருத்துவ கண்காணிப்பில் இருந்தவர்களை விடுதி அறையிலிருந்து யாருக்கும் தெரியாமல் தப்பிச்செல்ல உதவிய விடுதியின் மேலாளர் ஜெயன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட விடுதியினை மூடுமாறு அரசு பிறப்பித்த உத்தரவின் பேரில் மூணாறு டீ கவுண்டி என்ற அந்த விடுதி மூடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கொரோனா பீதி: ஆளில்லாமல் நடைபெறும் WWE!