தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன விபத்து - உயிரிழந்த வீரருக்கு ராணுவ மரியாதையுடன் அடக்கம்!

தேனி: லடாக் எல்லைக்கு ராணுவத் தளவாடங்கள் எடுத்துச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரான துரைச்சாமிபுரத்தில் இன்று (ஜூலை 11) ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Theni army officer died
Theni army officer died

By

Published : Jul 11, 2020, 1:29 PM IST

தேனி மாவட்டம், குச்சனூர் அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுராஜன். இவருக்கு ராணி என்ற மனைவியும், வர்சனா, தேஜஸ் ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவர், தற்போது ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் உள்ள 28AD Regment பிரிவில் ஹவால்தர் தரவரிசையில் வாகன ஓட்டுநராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சீனாவுடன் ஏற்பட்ட எல்லைப் பிரச்னையால், லடாக் பகுதியில் இந்திய ராணுவம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த 8ஆம் தேதி லடாக் எல்லைப்பகுதிக்குத் தேவையான தளவாடப் பொருட்களை உயர் அலுவலர்களின் உத்தரவுப்படி ஒடிசா முகாமில் இருந்து ராணுவ வாகனத்தில் ஓட்டுநராக அழகுராஜன் எடுத்துச் சென்றுள்ளார். உடன் இரண்டு ராணுவ வீரர்களும் சென்றுள்ளனர்.

நேற்று முன்தினம் ஜூலை 9ஆம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர்க் மாவட்டத்தில் உள்ள மலைச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில், அழகுராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணுவ உயர் அலுவலர்கள், காவல் துறையினர் அவர்களை மீட்டனர். அதனைத் தொடர்ந்து உயிரிழந்த அழகுராஜனின் உடல் நேற்றிரவு(ஜூலை 10) கோவை விமான நிலையம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து இன்று (ஜூலை 11) காலை அவரது சொந்த ஊரான துரைச்சாமிபுரத்தில் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

அங்கு உறவினர்கள், துரைச்சாமிபுரம் அதனைச் சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ராணுவ அலுவலர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தமபாளையம் வட்டாட்சியர் உதயராணி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக ஊர் மக்கள் ஒன்று கூடி மௌன அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அழகுராஜனின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடியை ராணுவ அலுவலர்கள் அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர்.

ராணுவ வீரர் அழகுராஜன் குறித்து அவரது உறவினர்கள், ஊர் பொதுமக்கள் கூறுகையில், 'விளையாட்டு வீரரான அழகுராஜன் இளம்வயதில் இருந்தே ராணுவத்தில் சேர்ந்து தாய் நாட்டிற்காக சேவையாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தவர். ராணுவத்தில் 15ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி, தனது பணியை சிறப்பாக செய்து வந்தார். ஊர் மக்களிடமும் அன்போடு பழகக் கூடியவர்.

மேலும் கிராமப்புற இளைஞர்களையும் படிக்கும் வயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஊக்கப்படுத்தி வந்தார். தற்போது விபத்தில் அழகுராஜன் உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி எங்களுக்கும் பேரிழப்பாக இருக்கிறது' என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details