நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் மாணவர்களின் வயதை கருத்தில் கொண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்களின் நீதிமன்ற காவலும் 4முறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை எஸ்.ஆர். எம் மருத்துவக் கல்லூரி மாணவர் பிரவீனின் தந்தை சரவணன் ஜாமீன் கேட்டு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் பிரவீனின் தந்தைக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.