நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்ட முதலாமாண்டு மாணவர் உதித்சூர்யாவையும், அவரது பெற்றோரையும் தேனி சிறப்பு தனிப்படை காவல் துறையினர் நேற்று கைது செய்து, விசாரணைக்காக தேனிக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் இன்று காலை விசாரணைக்காக தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினார்.
இந்நிலையில், மாணவர் உதித்சூர்யா, அவரது பெற்றோர், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஆகியோரிடம் சுமார் மூன்று மணி நேரமாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிபிசிஐடி கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் காவல்துறையினர் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இதில் கல்லூரி நிர்வாக அலுவலகம், முதலாமாண்டு மாணவர் வகுப்பறை, தேர்வு அரங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்களின் எண்ணிக்கை, ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.