நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் நான்கு பேர் ஆள்மாறாட்டம் செய்தது தெரியவந்துள்ளது.
இதில் மாணவன் ராகுலின் தந்தை டேவிட், பிரவீனின் தந்தை சரவணன் ஆகியோரை தற்போது தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், இச்சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மாணவி அபிராமியின் தந்தை மாதவன் விசாரணைக்காக தேனிக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இந்நிலையில், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்றொரு மாணவன் இர்பான் சிபிசிஐடியின் விசாரணைகளுக்கு பயந்து மொரீசியஸ் நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தப்பியோடிய மாணவன் இர்பானை விசாரணைக்காக இந்தியா கொண்டுவருவதற்கு மத்திய வெளியுறவுத் துறை உதவ வேண்டுமென சிபிசிஐடி கோரிக்கைவிடுத்துள்ளது.
இதனிடையே, மாணவர் உதித் சூர்யாவிற்கு உதவியதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் வேல்முருகன், திருவேங்கடம் மீது கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் புகார் அளித்தது பரபரப்பை அதிகரித்துள்ளார்.