தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: 4 பேருக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு!

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரவின், ராகுல், சரவணன், டேவிஸ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த பிணை மனுவை ரத்து செய்து மேலும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

NEET Impersonation case praveen and saravanan remand exstension

By

Published : Oct 25, 2019, 7:33 PM IST

Updated : Oct 25, 2019, 8:19 PM IST

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடையதாக சென்னை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்துவந்த மாணவர்கள் பிரவீன், ராகுல், மாணவி அபிராமி, அவர்களது பெற்றோர் சரவணன், டேவிஸ், மாதவன் ஆகியோரை செப்டம்பர் 28ஆம் தேதி தேனி சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள அழைத்து வந்தனர். இதையடுத்து, தேனி சமதர்மபுரத்திலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் முன்னிலையில் ஆறு பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.


அதில், சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரி மாணவன் பிரவீன், எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மாணவன் ராகுல் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக மாணவர்கள், அவர்களின் பெற்றோர் சரவணன், டேவிஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு செப்டம்பர் 28, 29 ஆகிய அடுத்தடுத்த தேதிகளில் நான்கு பேரும் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட சென்னை சத்யசாய் மருத்துவக் கல்லூரி மாணவி அபிராமி நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடந்து, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் இர்பான் என்பவர் மீதும் ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் தலைமறைவாகிய நிலையில், மொரீசியஸ் நாட்டிற்கு மாணவன் இர்பான் தப்பி ஓடியதாகத் தகவல் கிடைத்தது.

இதையும் படிங்க:மருத்துவத் தேர்வு முறைகேடு: பல்கலைக்கழகம் தீவிர ஆலோசனை

தகவலையடுத்து, இர்பானை பிடிப்பதற்கு சிபிசிஐடி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். ஆனால் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்த இர்பானை 9ஆம் தேதி தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, இர்பானின் தந்தை முகமது சபியிடம் சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவர் போலி மருத்துவர் எனத் தெரியவந்தது.

அவர் முறையாக மருத்துவம் படிக்காமல் வாணியம்பாடியில் மருத்துவமனை நடத்திவந்தது கண்டறியப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, சிறையில் உள்ள இந்த ஆறு பேரின் சார்பில் அவரவரது வழக்கறிஞர்கள் தேனி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

நீட் தேர்வு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

அதன்பின், தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் பிணை கோரி மேல்முறையீடு செய்யப்பட்டு அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், சிறையில் உள்ள மாணவர்கள் பிரவீன், ராகுல், இர்பான், அவர்களின் பெற்றோர் சரவணன், டேவிஸ் முகமது சபி ஆகிய ஆறு பேரின் நீதிமன்றக் காவல் முடிந்து இரண்டாவது முறையாக இன்று தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம் இவர்களின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாள்கள் நீட்டித்து, வருகிற நவம்பர் 8 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் ஆறு பேரையும் காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

இவர்களைத் தொடர்ந்து, மதுரை மத்திய சிறையில் உள்ள சென்னை சவீதா மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா, அவரது தாயார் மைனாவதி ஆகியோரின் நீதிமன்றக் காவல் முடிந்து தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: வெங்கடேஷுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

Last Updated : Oct 25, 2019, 8:19 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details