தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணையில் குறைந்த நீர்மட்டம்: மூவர் குழுவினர் ஆய்வு!

தேனி: முல்லைப் பெரியாறு அணையில் போதிய மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருவதால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூவர் குழுவினர் ஆய்வுசெய்தனர்.

முல்லை பெரியாற்றை ஆய்வு செய்த மூவர் குழுவினர்
முல்லை பெரியாற்றை ஆய்வு செய்த மூவர் குழுவினர்

By

Published : Jan 28, 2020, 3:32 PM IST

Updated : Jan 28, 2020, 8:09 PM IST

தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் உள்ள தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழ்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அணையை கண்காணித்துப் பராமரிக்க மூவர் குழுவை நியமித்தது.

ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு செய்து பராமரிப்புப் பணிகள் குறித்து ஆலோசனைகளை இக்குழுவினர் வழங்குவர். அதன்படி அணையில் பணிகள் மேற்கொள்ளப்படும். இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ், உறுப்பினர்களாக தமிழ்நாடு அரசு சார்பில் பொதுப்பணித்துறைச் செயலர் மணிவாசன், கேரள அரசு சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் செயலர் அசோக் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், போதிய மழையின்றி நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய மூவர் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். முன்னதாக தேக்கடியில் உள்ள படகுத்துறையிலிருந்து முல்லைப் பெரியாறு அணைக்கு மூவர் குழுவினர், தமிழ்நாடு-கேரள அலுவலர்கள் படகில் சென்றனர். கடந்தாண்டு ஜூன் மாதம் 4ஆம் தேதிக்குப் பிறகு தற்போது மூவர் கண்காணிப்புக் குழுவின் ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வில் பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி, சீப்பேஜ் வாட்டர் (கசிவு நீர்) உள்ளிட்டவைகளை இக்குழுவினர் ஆய்வு செய்தனர். மேலும், அணையின் 2, 4ஆவது மதகுப்பகுதிகளை கண்காணிப்புக்குழுவினர் இயக்கிப் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து குமுளி 1ஆம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மூவர் குழு தலைவர் குல்சன்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள சில பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அணையின் பாதுகாப்பு, மின் இணைப்பு சாலை வசதி உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அணைக்கு மின் இணைப்பு பெறுவதற்கு தமிழ்நாடு அரசு கேரள மின்வாரியத்திற்கு ஏற்கனவே பணம் செலுத்தியுள்ளது. சில துறைகளில் அனுமதி பெற வேண்டியுள்ளதால் விரைவில் அனுமதி கிடைக்கும்.

வல்லக்கடவு வழியான வனப்பாதை மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையை சீரமைக்க தமிழ்நாடு அரசு ஒரு திட்டம் தயாரித்துள்ளது. அதற்கு கேரள வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும். உரிய அனுமதியுடன் சாலை அமைக்கும் பணி விரைவில் நடைபெறும். தற்போது அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம். பேபி அணையைப் பலப்படுத்திய பின்னர்தான் 152 அடியாக நீர் மட்டத்தை உயர்த்த முடியும். பேபி அணையைப் பலப்படுத்த சில மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறையின் அனுமதிக்காக தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. அதற்கான அனுமதியும் விரைவில் கிடைக்கும்.

முல்லை பெரியாற்றை ஆய்வு செய்த மூவர் குழுவினர்
தேவைப்பட்டால் அணைப்பகுதியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மூவர் குழு பரிந்துரை செய்யும் என்றார். தொடர்ந்து பேசிய அவர் அணைக்கு புதிய படகு இயக்குவது, சாலை, நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து இரு மாநில அரசுகள் தான் பேசித் தீர்த்துக்
கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: முல்லை பெரியாறு அணையை ஆய்வுசெய்த அலுவலர்கள்!

Last Updated : Jan 28, 2020, 8:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details