கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது. 2014 ஆம் ஆண்டு மே மாதம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் குழுவையும் நியமித்தது.
இக்குழுவிற்கு உதவியாக ஐந்து பேர் கொண்ட துணைக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழ்நாடு பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத் துறை செயற்பொறியாளர் ஜோஸ் சக்கிரியா, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையின்றி நீர்மட்டம் குறைந்துவருவதால் அணைப்பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து இன்று துணைக் கண்காணிப்புக் குழவினர் ஆய்வுசெய்து-வருகின்றனர். இதற்காகத் தேக்கடியில் உள்ள படகுத்துறை வழியாக அணைக்குச் சென்ற அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் பெரியாறு மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி, மழையின் அளவு, அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து இன்று மாலை குமுளியிலுள்ள பெரியாறு அணை கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அணை ஆய்வு குறித்த விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு அது குறித்த அறிக்கை மூவர் கண்காணிப்புக் குழுத் தலைவரான குல்சன்ராஜுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.
கடந்த மாதம் நவம்பர் 19ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 128.45 அடியாக இருந்தபோது ஆய்வுசெய்யப்பட்டது. தற்போது மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் தலைமையில் இன்று நீர்மட்டம் 119.40 அடியாக உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாலையில் நின்ற லாரியில் திடீர் தீ!