தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக விடாது மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த கனமழையினால் முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு உள்பட ஐந்து மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரால் 120 அடிக்கு கீழ் சரியத் தொடங்கிய முல்லைப் பெரியாறு அணை நீரின் அளவு கிடுகிடுவென உயர்ந்து தற்போது 130 அடியை எட்டியுள்ளது. அணையின் மொத்த நீர்த்தேக்க அளவான 142 அடியில் இன்று (ஜன.17) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 130.65 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 4ஆயிரத்து 849 மி.கன அடியாக இருக்கிறது.