கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஊத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாவட்ட, மாநில எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வெளி மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டத்தில் உள்ள வட மாநிலத்தவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. கட்டுமானம், உணவகம், திரையரங்கம், செங்கல்சூளை உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த உத்திரப் பிரதேச மாநில கூலித் தொழிலாளர்களில் 180 பேர் இன்று முதல்கட்டமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.