மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தேனியில் இன்று (அக். 19) இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் உழவன் உரிமை மீட்பு மாநாடு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டது. இதில் பங்கேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தேனி வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ஜவஹர்லால் நேருவின் முதல் ஐந்தாண்டு திட்டமே விவசாயிகளுக்கான திட்டம் தான். ஒரு காலத்தில் இந்தியாவின் உணவுத் தேவையை அமெரிக்கா பூர்த்தி செய்துவந்த நிலையில், இந்திராகாந்தியின் சீரிய முயற்சியால் ஏற்பட்ட பசுமை புரட்சிக்குப் பிறகு இந்தியாவின் உணவு உற்பத்தி அதிகரித்து உணவுக் கிடங்குகளில் நெல், கோதுமைகள் எல்லாம் அதிகமாகச் சேமித்து வைக்கப்பட்டன.
இன்றைக்கு வெளிநாடுகளுக்கு அனுப்புகிற அளவுக்கு உணவு உற்பத்தியில் வளர்ந்திருப்பற்குக் காரணம் காங்கிரஸ் கட்சி தான். ஆனால் இந்த வளர்ச்சியை துவம்சம் செய்கின்ற அளவில் மோடி அரசு, புதிய வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது. எப்படி பணமதிப்பிழப்பால் இந்திய பொருளாதாரம் வீழ்ந்ததோ, ஜிஎஸ்டியால் இந்திய வியாபாரம் வீழ்ச்சி அடைந்ததோ, அது போல புதிய வேளாண் சட்டத்தால் விவசாயம் அழிந்துவிடும் சூழல் உள்ளதால் இதனை எதிர்க்கின்றோம்.
பொது கொள்முதல், பொது விநியோக முறை, குறைந்தபட்ச விலை நிர்ணயம் ஆகியவைகள் தான் காங்கிரஸின் விவசாயக் கொள்கையாக இருந்தது. பொதுத் துறை நிறுவனங்கள் இந்தியாவின் ஆலயமாகக் கருதப்படுகிறது. அதனை வளர்ப்பதற்கு நேரு பாடுபட்டார். ஆனால் மோடியோ அதனை அழித்துவருகிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறையான பிஎஸ்என்எல்-க்கு 4ஜி சேவை வழங்காமல் ஜியோவிற்கு அனுமதி அளித்ததால் இன்றைக்கு பிஎஸ்என்எல் அழிந்துவருகின்றது. பொதுத்துறை நிறுவனங்கள் எப்படி அழிந்து வருகிறதோ அதுபோல புதிய வேளாண் சட்டத்தால் விவசாயம் அழிந்துவிடும்.