கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணார் அருகே அமைந்துள்ளது பெட்டிமுடி. உலக சுற்றுலா பயணிகளை தன்வசம் இழுக்கும் மூணாரில், இரவிக்குளம் தேசியப் பூங்கா அருகே ராஜாமலை எனும் இடத்திற்கு அடுத்தாற்போல அமைந்துள்ள பெட்டிமுடி பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் லைன்ஸ் எனச் சொல்லப்படும் நான்கு குடியிருப்புகள் உள்ளன.
கேரளாவில் டாடா நிறுவனத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்கள், எஸ்டேட்களில் பணிபுரிபவர்களுக்காக கட்டித் தரப்பட்டது தான் இந்த குடியிருப்புகள். இதில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தமிழர்களே. தென்மேற்குப் பருவமழை தற்போது கேரளாவில் தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பெட்டிமுடி பகுதியில் நேற்றிரவு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பெட்டிமுடி பகுதி குடியிருப்பில் வசித்து வந்த சுமார் 80பேர் வரை மண்ணில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
கனமழையால் மின்சாரம், சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. ராஜமலை செல்வதற்கான முக்கிய வழித்தடத்தில் உள்ள பெரியவாரை பாலமும் சேதமடைந்ததால் சம்பவ இடத்திற்கு மீட்புப் பணியினர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து மாற்று பாதை வழியாக சென்று தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், மூணார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.