தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட சிறு விசைத்தறிக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காட்டன் சேலை, சுங்குடி சேலை, கோடம்பாக்கம் சேலை மற்றும் காவி, கருப்பு, வெள்ளை நிற வேஷ்டிகள் உற்பத்தி நடைபெறுகின்றன.
விசைத்தறி இயக்குதல், பசைபோடுதல், பன்னேற்றம், பாவு கட்டுதல், சலவை மற்றும் சாயப்பட்டறை என நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5000க்கும் மேற்பட்டோர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்வு, சம்பள பிரச்னை மற்றும் கரோனா ஊரடங்கு காரணமாக நெசவுத்தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே ஈரோடு போன்ற வெளிமாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட வேஷ்டி ரகங்களை வாங்கி சலவை செய்து சந்தைப்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து கைச்சலவை பட்டறைத் தொழில் குறித்து சில தனிநபர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பொய் புகார் தெரிவித்து, தொழிலை முடக்குவதாகக் கூறி சக்கம்பட்டி சலவைப் பட்டறைத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.