நீட் தேர்வில் வெற்றி பெற்று இந்திய அளவில் சாதனை புரிந்த தேனி மாணவர் ஜீவித் குமாரை பாஜகவினர் மிரட்டி வருவதாக சபரிமாலா வீடியோ பதிவிட்டிருந்தார். இதனை மறுத்துள்ள மாணவர் ஜீவித் குமார் என்னை யாரும் மிரட்டவில்லை எனப் பதில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் வெளியான நீட் தேர்வு முடிவில் அரசுப்பள்ளி மாணவர்கள் தரவரிசையில் 664 மதிப்பெண் பெற்று இந்திய அளவில் தேனியைச் சேர்ந்த மாணவர் ஜீவித் குமார் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி.ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேரில் வாழ்த்தி, மாணவனுக்கு நினைவுப் பரிசாக புத்தகம் வழங்கினார். மேலும் பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் மாணவர் ஜீவித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தவிர, அரசுப் பள்ளி மாணவரே நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனைப் படைத்து விட்டார், இதனால் நீட் தேர்வில் வெற்றி பெறுவது சுலபம் என்று சிலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர். இதற்கு நீட் தேர்வு எதிர்ப்பாளர்கள் பதில் கருத்தை தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.