தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. அணையின் மொத்த உயரம் 71 அடியாகும். தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் பாசனத்திற்கு ஆதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் தற்போது நீர் வரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓரளவு மழை பெய்து வந்ததால் தொடர்ந்து 40 அடிக்கு மேல் வைகையில் தண்ணீர் இருந்து வந்தது. குறிப்பாக கடந்தாண்டு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த தென்மேற்கு பருவமழையால் அதன் முழு கொள்ளளவை எட்டி நீர் நிரம்பியது.
இதனால், குடிநீர், விவசாய பாசனம் ஆகியவற்றிற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து, அணையின் நீர்மட்டம் சற்று குறையத் தொடங்கியது. அத்துடன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை கை கொடுக்காததால் இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்தது 29அடியாகச் சரிந்துள்ளது.
எனவே, விவசாயிகள் பங்களிப்புடன் கூடிய குடி மராமத்து பணிகள் மூலம் தற்போது ஏரி குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு அரசு வைகை அணையையும், தூர் வாரி மழைக் காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் செய்தால் மட்டுமே வருங்காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.