தேனி மக்களவைத் தொகுதியில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றுவருகின்றது. ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலசமுத்திரம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி ஆகிய இரு வாக்குச்சாவடி மையங்களில் இந்த மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனை திமுக, அதிமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நேரில் சென்று வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவினை பார்வையிட்டு வருகின்றனர்.
எத்தனை முறை மறு தேர்தல் நடத்தினாலும் ஓபிஎஸ் மகன் டெபாசிட் வாங்க முடியாது -ஈவிகேஎஸ்!
தேனி: ஓபிஎஸ் மகன் டெபாசிட் வாங்குவதற்காகவே தேனி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது என காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், பாலசமுத்திரத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தினை தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தேனி தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் உள்பட அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. வாரணாசி சென்ற துணை முதலமைச்சர் ஓபிஎஸ், மோடியை சந்தித்து அவரது காலில் விழுந்ததனால் பிரதமரின் கைக்கூலியாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் மூலம் மறு வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது" என்று குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "மறு வாக்குப்பதிவின் மூலம் டெபாசிட் வாங்கிவிடலாம் என்று எண்ணுகின்றனர். ஆனால், எத்தனை முறை மறு தேர்தல் நடத்தினாலும் அவர்கள் டெபாசிட்கூட வாங்கப்போவதில்லை. திமுக - காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி" என இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்தார்