பத்தனம்திட்டா(கேரளா): நாளை டிச.6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடைபந்தல், பம்பை, கோயில் சந்நிதானம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பின்னரே பக்தர்கள் கோயிலில் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
வழக்கமாக கோயிலில் 1750 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் விதமாக 100 அதிவிரைவு காவல் படையினர் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோயிலுக்கு வரும் பக்தர்களின் நடவடிக்கைகள் முழுமையாக 88 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் இருமுடி மற்றும் பை உள்ளிட்ட அனைத்தும் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகிறது.