தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் (30). இவர், பெங்களுரில் உள்ள ஐடி நிறுவனத்தில் சிஇஓ -வாக பணியாற்றி வருகிறார். இவரது தலைமையில் சுமார் 20 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமடைந்ததையடுத்து, சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் ஐடி ஊழியர்களை, "வொர்க் ஃபிரம் ஹோம்" என்று சொல்லி வீட்டிலேயே இருந்து வேலை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், அரவிந்த் தனது நிறுவனத்திலிருந்து, எட்டு பேரை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார். மேலும் இவர்கள் அனைவரும் அரவிந்த்க்குச் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்றில் செம்மண் தரையில் போர்வையை விரித்து தங்களது அலுவலகத்தை உருவாக்கி அமர்ந்திருக்கிறார்கள்.
அவசர அவசரமாக அலுவலகம் புறப்பட்டு குளுகுளு ஏசியறையில் உள்ள தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து கீபோர்டுக்கும் கம்ப்யூட்டருக்கும் மட்டுமே தனது கவனத்தை கடன் கொடுத்து உணவு இடைவெளியில் பீட்சா, பர்கர் என துரித உணவுகளை முழுங்கும் அவர்களுக்கு இந்தச் சூழல் வித்தியாசமான அனுபவம் தான்.
மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம், மேனியைத் தழுவிச் செல்லும் வாடை காற்று, திரும்பும் திசையெங்கும் இயற்கை எழுப்பும் இசை, மிச்சம் வைக்க மனம் வராத கிராமத்து உணவு என்று, இந்தச் சூழலே இறுதி வரைக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர்களின் குழுவில் இலங்கை, பிலிப்பைன்ஸ், டெல்லி, கொல்கத்தா, ஆந்திரா போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர். ஏழு மணி நேரம் வேலை, 8 மணி நேரம் தூக்கம், 9 மணி நேரம் இயற்கையை ரசித்து ஊர் சுற்றுவது என்று நேரத்தை ஒதுக்கி, தங்களுடைய பணியை செய்து வருகின்றனர்.