தேனி:சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகரும் இயக்குநருமான மாரிமுத்துவின் உடல் நேற்று (செப். 8) சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கபட்ட நிலையில் பல்வேறு திரையுலக பிரபலங்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி சடங்கு:இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பசுமலைதேரி கிராமத்திற்கு நேற்று (செப். 8) மாலை 6 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரபட்டு 12 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று (செப். 9) அதிகாலை 5.50 மணியளவில் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
மாரிமுத்துவின் உடல் பசுமலைதேரி கிராமத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பாக குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அஞ்சலிக்காக வைக்கபட்டது. குடும்பத்தினரும், உறவினர்களும் நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் காலை 11 மணிக்கு மேல் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது மகன் அகிலன் தெரிவித்து உள்ளார்.
சினிமா நாட்டம்:மயிலாடும்பாறை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்த மாரிமுத்து பின்னர் சிவகாசியில் உள்ள பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் பயின்றார். படித்து கொண்டிருக்கும் போதே சினிமாவில் நாட்டம் கொண்ட மாரிமுத்து, இரவில் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது கரிக்கட்டையால் சுவற்றில் நான் சினிமாத் துறைக்கு செல்லவேண்டும் என எழுதி வைத்துவிட்டு சென்னைக்கு சென்று உள்ளார்.