தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் இன்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. உதகையில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப் குமார் கலந்து கொண்டார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 14 ஆண்டுகளில் 30 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு!
நீலகிரி: தமிழ்நாட்டில் 14 ஆண்டுகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 30 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணபட்டுள்ளதாக தமிழ்நாடு தகவல் ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி 14 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் 30 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுதாரருக்குத் தகவல் அளிக்க மறுக்கும் அலுவலர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்களுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது” என்றார்.
தற்போது மாநிலத்தில் திருநெல்வேலி, மதுரை போன்ற மாவட்டங்களில் இச்சட்டத்தின் கீழ் அதிகமானோர் தகவல்களைக் கேட்பதாகக் கூறிய அவர், கிராமப்புற மக்கள் அதிக அளவில் இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருவதாகவும், நகர்ப் புற மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார்.