இந்தியாவில் சீரம், பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் கரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. இந்த சூழலில் அனைத்து மாநிலங்களும் கரோனா தொற்றைக் கட்டுபடுத்த முடியாமல் திணறி வருகின்றன. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிற்கு 20 லட்சம் கரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், மத்திய அரசு இரண்டு லட்சம் கரோனா தடுப்பூசிகளை மட்டுமே தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி தேவையை பூர்த்திசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நம்நாட்டின் கரோனா தடுப்பூசித் தேவையை பூர்த்திசெய்ய பொதுத்துறை நிறுவனங்களை கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.