நீலகிரி மாவட்டம், சேரம்பாடி பகுதியில் உள்ளது குழி வயல் பழங்குடி கிராமம். இந்தக் கிராமத்தில் காட்டுநாயக்கர், பனியர் இனத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அடர்ந்த வனப் பகுதிக்குள் அமைந்துள்ள இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், சுமார் 50 ஆண்டு காலமாக சாலை வசதிகள் இன்றி திண்டாடி வருகின்றனர்.
50 ஆண்டுகளாக சாலைவசதி இல்லாமல் திண்டாடும் பூர்வக்குடிகள்!
நீலகிரி : தங்களது மலை கிராமத்திற்கு சாலை வசதிகள் செய்துதரக் கோரி, கிராமத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து பல முறை அரசு அலுவலர்களுக்கு புகார் மனு அளித்தும், சாலை அமைத்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இக்கிராம மக்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்குக்கூட விரைவாக மருத்துவமனையை அணுக முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நிலையிலும், அவர்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக அச்சத்துடன் காட்டு வழியாகவே நடந்து செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், தங்களது கிராமத்திற்கு உடனடியாக சாலை வசதி செய்துதரக் கோரி மனு அளிப்பதற்காக, உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அக்கிராம பூர்வக்குடி மக்கள் வந்தனர். ஆனால் அங்கு ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா இல்லாததைத் தொடர்ந்து, அலுவலர்களிடம் மனு அளித்து கிராம மக்கள் ஊர் திரும்பினர்.