தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளின் தரத்தால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது - சுற்றுலாத்துறை அமைச்சர்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்குவதால் மாணவர்கள் சேர்க்கை 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ministers k ramachandran and ganesan participate in kalaignar centenary celebration job fair at coonoor
கலைஞர் நூற்றாண்டு விழா வேலைவாய்ப்பு முகாம்

By

Published : Jul 26, 2023, 8:25 AM IST

கலைஞர் நூற்றாண்டு விழா வேலைவாய்ப்பு முகாம்

நீலகிரி: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நேற்று (ஜூலை 25) நடைபெற்றது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. மேலும், சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விழாவில் வேலைவாய்ப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கருணாகரன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமை வகித்தார். வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகவ ராவ் திட்டம் குறித்து விளக்கினார். விழாவில் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், “தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கல்வி மற்றும் மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பழங்குடியினர் குழந்தைகள் மற்றும் அனைத்து குழந்தைகளும் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் சிறந்து விளங்குவதால் மாணவர்கள் சேர்க்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதேபோல் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கி வரும் நிலையில், மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தற்போது 53 சதவீதம் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மதிய உணவு மற்றும் சத்துணவு ஆகியவை வழங்கப்பட்டு வந்தது. குழந்தைகளின் நலன் கருதி தற்போது தமிழ்நாடு அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி உள்ளது.

இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் ஆர்வமும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் நோக்கில் அயல் நாட்டிற்குச் சென்று பல்வேறு நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வலியுறுத்தியதன் பேரில், 143 அயல்நாட்டு நிறுவனங்கள் தற்போது மாநிலத்தில் தொழில் தொடங்க முன் வந்துள்ளன. இதன் மூலம் 27 லட்சத்து 3,500 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது.

4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. குன்னூரில் உள்ள அரசு ஐடிஐ உலக தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இங்கு பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் பயிலும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் பல்வேறு புதிய கருவிகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. 34 கோடி ரூபாய் செலவில் கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி கணேசன் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அதற்கான சான்றிணை வழங்கினார். அப்போது பேசிய அவர், “கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் 100 இடங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இரண்டாவது மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் நடத்தப்பட்டது.

இதில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு இளைஞர்கள் மற்றும் மாணவ - மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலையை போக்கிடும் வகையில், மாநிலத்தில் ஏற்கனவே பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அனைவருக்கும் வேலை கிடைக்கும் வகையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். அதேபோல் விடா முயற்சியும் இருத்தல் வேண்டும். தடைக்கற்களை படிக்கட்டுகளாக மாற்றி வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும். வெற்றி அருகில் உள்ளது. அதனை தொட்டுவிட நீங்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: 50% காலியாக உள்ள பார்வை மாற்றுத்திறனாளிகள் பள்ளி ஆசிரியர் பணிகள் - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details