நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம், ஆசியாவில் மிகப்பெரிய பழமையான புலிகள் காப்பகமாகும். வருடம்தோறும் முதுமலையில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதுமலை வனப்பகுதி நடுவே உள்ள வன விலங்குகளை கண்டுகளிக்க வனத் துறை சார்பாக யானை சவாரி மற்றும் வாகன சவாரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் முதுமலை முகாமில் உள்ள 27 வளர்ப்பு யானைகளுக்கு காலை, மாலை உணவு வழங்குவதை சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர். தற்போது கரோனா தொற்று காரணமாக சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்ட நிலையில், இதை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தற்போது படிப்படியாக சுற்றுலாத் தளங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பயணிகள், சுற்றுலாத் தளங்களை கண்டுகளிக்க இ-பாஸ் வழங்கி, அதன் மூலம் பூங்காக்களுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் முதுமலை புலிகள் காப்பகத்தை நம்பி ஆயிரக்கணக்கான சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்களின் குடும்பங்கள் வேலை இழந்துள்ள நிலையில், தற்போது முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.