கோவை கொலை வழக்கு - இருவரை சுட்டுப்பிடித்த போலீஸ்...! கோத்தகிரி(நீலகிரி):கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புற நுழைவு வாயிலில் கோபாலபுரம் பகுதி உள்ளது. இங்கு வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், தனியார் தங்கும் விடுதிகள், திரைப்பட விநியோகஸ்தர்கள் அலுவலகங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. நேற்று (13.02.2023) 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டியதில் கீரநத்தம் பகுதியினைச் சேர்ந்த கோகுல் உயிரிழந்தார்.
கொலையாளி சிவானந்த காலனியைச் சேர்ந்த மனோஜ் என்றும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் 5 பேர் நீலகிரி மாவட்டத்தினுள் நுழைந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து நீலகிரி மாவட்ட எஸ்.பி. பிரபாகரன் உத்தரவின்படி காவல் துறையினர் குன்னூர் காட்டேரி பகுதி குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அதில் காட்டேரி பகுதியில் பேருந்துகள் மற்றும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் லாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அப்போது கோத்தகிரி காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கட்டப்பட்டு மற்றும் கோத்தகிரி மார்க்கெட் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் நீதிமன்றம் அருகே நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஹரி, பரணி சவுந்தர், கவுதம், அருண் குமார், ஜோசுவா தேவபிரியன் ஆகியோர் என்பதை தெரிந்து கொண்ட காவல் துறையினர் ஐந்து நபர்களையும் கைது செய்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே கைதிகளை அழைத்து வரும் வழியில் ஒரு கைதி தப்பியோடியதாகவும், அவரை போலீசார் துரத்திப்பிடிக்க முயற்சி செய்த போது துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு கைதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கவுதம், ஜோஷ்வா ஆகிய இருவருக்கு காலில் துப்பாக்கி துண்டு துளைத்ததால் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்து வரப்படுகின்றனர்.