தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருநல்லூரில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கும்பகோணம் ஒன்றிய பேரவை கூட்டமானது ஒன்றிய தலைவர் கே.குணசேகரன் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் என்.கணேசன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கிடையே செய்தியார்களைச் சந்தித்த மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன், "தமிழ்நாட்டை பாலைவனமாகும் வகையில், கர்நாடகாவில், ஆளும் பாஜக, காவிரியின் குறுக்கே மேகதாதுவில், புதிய அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு ஒன்றிய அரசு துணை நிற்கிறது. இதற்கு ஏற்பவே, காவிரி ஆணையத்தின் தலைவரின் பேச்சும் நடவடிக்கையும் அமைந்துள்ளது. இதனை கண்டிக்கிறோம், அந்த பேச்சை ஆணையத் தலைவர் வாபஸ் பெற வேண்டும். ஒன்றிய அரசும், அணை கட்ட அனுமதிக்க கூடாது. இதற்காக மாநிலம் தழுவிய அளவில் பெரிய போராட்டத்தை முன்னெடுக்க ஆலோசித்து வருகிறோம்.
கும்பகோணம் ஒன்றிய பேரவை கூட்டம் டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதலின் போது, தாமதம் இன்றி உரிய காலத்தில் கொள்முதல் செய்யவும், திறந்த வெளி கிடங்குகளில் வைப்பதன் மூலம் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து அரசிற்கு பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, போதுமான அளவிற்கு செட்டுகள் அமைக்க வேண்டும்.
அதுபோலவே ஒன்றிய அரசு, நெல்லுக்கான விலையை 2023-க்கு கிலோ ஒன்றுக்கு ரூபாய் ஒன்று மட்டும் உயர்த்தி அறிவித்து, உற்பத்தி செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்திய விவசாயிகளுக்கு மோடி அரசு பெரும் துரோகம் இழைத்துள்ளது. கேரள அரசு குவிண்டல் நெல்லுக்கு ரூபாய் 2,850 ஆக அறிவித்து கொள்முதல் செய்து வரும் வேலையில், உற்பத்தி செலவை கணக்கிட்டு அதனுடன் 50 சதவீதம் சேர்த்து விலையினை நிர்ணயம் செய்ய வலியுறுத்தும் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'காவிரியின் உரிமையை காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி