தஞ்சாவூர்:கும்பகோணம் மாநகரில் ஆண்டு தோறும் கோடை காலத்தில், தமிழ்நாடு எண்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில், சிறப்பு பொருட்காட்சி அமைக்கப்படும், அதுபோல இவ்வாண்டும், புதிய பேருந்து நிலையம் அருகே அல்அமீன் பள்ளி மைதானத்தில், 129 ஆண்டுகள் பழமையான 801 அடி நீளமும், 200 அடி அகலமும் கொண்டு லண்டன் டவர் பிரிட்ஜ் எனும் தொங்கு பாலத்தை நினைவுபடுத்தும் வகையில் இக்கண்காட்சியின் முகப்பு, அழகி கலைநயத்துடன், பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது.
இந்த முதல் நாளான இன்று (மே 14) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்காட்சியைக் காண ஆர்வமுடன் திரண்டு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட லண்டன் தொங்கு பாலம் நுழைவு வாயிலைக் கடந்துசென்ற போது, அதன் அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும், அரங்கின் உட்புறம் லண்டன் மாநகர முக்கிய வீதிகளின் காட்சிப்பதிவும் தத்ரூப படங்களாக காட்சிப்படுத்தப்பட்டு, காண்போரை லண்டன் வீதியில் இருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியது.
இப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில், பல்வேறு வகையாக பெண்களுக்குத் தேவையான அலங்காரப்பொருட்கள், ஆடை, அணிகலன்கள், காலணிகள், பிளாஸ்டிக் பொருட்கள், டெல்லி அப்பளம், ஊட்டி மிளகாய் பஜ்ஜி, ஐஸ் கிரீம், பாப்கார்ன், பானி பூரி, மசால் பூரி, காலிஃபிளவர் பக்கோடா, உள்ளிட்ட உணவு பதார்த்தங்கள் அருசுவை விருந்தளித்தன. சின்னஞ்சிறு குழந்தைகளைக் கவரும் வகையில், அவர்கள் பொழுதுபோக்க வசதியாக ரயில்கள், நவீன கார்கள், ஹெலிகாஃப்டர்கள், சுழலும் கப்புகள், தத்தி தத்தி செல்லும் தவளைகள், டிராகன் ஊஞ்சல் என விதவிதமான பொழுதுபோக்கு விளையாட்டுகள் ஆகியவற்றுக்கும் இக்கண்காட்சியில் பஞ்சமில்லை.