தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சேர்ந்தவர்கள், பாலகணேசன்- செல்வமணி தம்பதியினர். பாலகணேசன் விவசாயத் தொழில் பார்த்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு மகளும், நான்கரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்களது, நான்கரை வயதான சாதவ் என்ற மகன், அப்பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் யுகேஜி படித்து வருகிறார். இந்த வயதில் திருக்குறள் படிப்பதை இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
8 நிமிடத்தில் 100 திருக்குறள் கூறி உலக சாதனை:இதனையடுத்து, அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கத்தின் காரணமாகத் திருக்குறளை மனப்பாடமாக கற்றுத் தேர்ந்துள்ளார். இதனையடுத்து, உலக சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக இன்று (டிச.9) தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமநாதன், 'சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' (Cholan Book of World Records) மண்டல தலைவர் செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் முன்னிலையில் 100 திருக்குறளை மனப்பாடமாக 8 நிமிடத்தில் எடுத்துக் கூறி சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மூலம் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
பின்னர், இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மேயர் ராமநாதன் மற்றும் சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பள்ளிச் சிறுவன் சாதவ்-க்கு வழங்கியதோடு அவரை வெகுவாகப் பாராட்டினர். மேலும், 8 நிமிடத்தில் 100 திருக்குறளைக் கூறி அசத்திய சிறுவனை அவரது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்த்தினர்.