கும்பகோணம் ரயில் நிலையத்தில் உலா வரும் தெரு நாய்கள் கும்பகோணம்: தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்களில், முக்கிய ரயில் நிலையங்களுள் ஒன்றாகத் திகழ்வது கும்பகோணம் ரயில் நிலையம். இது ஒரு சந்திப்பு ரயில் நிலையமாக இல்லாத நிலையில் கூட, பயணிகள் ரயில், விரைவு ரயில்கள், வடமாநில செல்லும் தொலைதூர ரயில்கள் என எண்ணற்ற ரயில்களின் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வருகை தருகின்றன. இதனால் கும்பகோணம் ரயில் நிலையம் சுறுசுறுப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும், இந்தியாவின் சுத்தமான ரயில் நிலையங்களுள் ஒன்றாகக் கும்பகோணம் ரயில் நிலையம், மத்திய அரசால் பாராட்டும், பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், சமீப காலமாக, இந்த ரயில் நிலைய நடைமேடைகளில், தெரு நாய்கள் ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
ரயில் நிலைய நடைமேடையில் திரியும் நாய்கள், பயணிகள் அமரும் இடங்களில் அருகே அமர்ந்து கொண்டு அமைதியாக ஓய்வெடுத்தாலும், பயணிகள் பலர் அதன் அருகே செல்ல அஞ்சி, அங்கு அமர்வதைத் தவிர்த்து, தள்ளி நின்றபடியே காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரூ.2000 நோட்டுகளை மீண்டும் பயன்படுத்தலாம்..! - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சில நேரங்களில், இந்த நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு ஒன்றை ஒன்று துரத்துவதும், கடித்து விளையாடுவதும், இன்னும் சில நேரங்களில் சண்டையிடுவதும் என நடந்து கொள்வது, தங்கள் மீது பாய்ந்து, கடித்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துவதாக நடைமேடையில் ரயிலுக்காகக் காத்திருக்கும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பயணிகள் நாய்க்கடிக்கு ஆளாகும் முன்னர், ரயில் நிலையத்தில் தெரு நாய்களின் படையெடுப்பு கட்டுப்படுத்தி, அவற்றின் தொல்லைகளிலிருந்தும், அச்சுறுத்தல்களில் இருந்தும் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க ரயில் நிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
மேலும், இதைப் போன்ற ரயில் நிலையங்களில் நிலவும் நாய் தொல்லை என்பது நாட்டின் பல்வேறு ரயில் நிலையத்தில் காணப்படுகிறது. இது பயணிகள் மத்தியில் அச்சத்தையும், அசவுகரியத்தையும் ஏற்படுத்தும் நிலை உள்ளது. குறிப்பாக ரயில் வரும் பரபரப்பான சமயத்தில் மிகவும் இடையூறாக இருப்பதாகப் பயணிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் எதையும் செய்யவில்லை - தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!