தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கணபதி அக்ரஹாரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மஹாகணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலைப் பற்றி அகத்தியர் தம் நாடியில், சதுர்வேதி மங்களம், காவிரி கரையில் அமைந்துள்ள ஐங்கரத்தான் ஆலயம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்ரீ கர்கர் மகரிஷி தமது கிரந்தத்தில், தமிழ்நாட்டு கணபதி ஷேத்திரங்களை பற்றி வர்ணித்துள்ளபடி, ஸ்ரீ மஹாகணபதி அகஸ்திய முனிவரால் பிரதிஸ்டை செய்யப்பட்டதும், கௌதம முனிவரால் பூஜிக்கப்பட்டு வேண்டிய வரம் தரும் கோயிலும் இதுதான் என கருதப்படுகிறது.
அந்த வகையில், இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஸ்ரீ மஹாகணபதி கோயிலில், விநாயகர் சதுர்த்தி ப்ரமோத்ஸவம் கடந்த செப்.8ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் வேத பாராயணம், திருமுறை பாராயணம் முழங்க வான வேடிக்கைகளுடன் சுவாமி வீதியுலா நடைபெறும்.
அந்த வகையில் வெள்ளி மூஷிக வாகனம், யானை வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், காமதேனு வாகனம், கற்பக விருட்ச வாகனம், சேஷ வாகனம், அலங்கார சப்பரத்தில் ஸ்ருஷப வாகன காட்சி, குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் சாமி புறப்பாடு தினமும் நடைபெற்றது.
தொடர்ந்து, இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று (செப் 17) நடைபெற்றது. அதில் அலங்கரிக்கப்பட்ட தேரில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மஹாகணபதி எழுந்தருள, பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாதஸ்வரம், மேளம், தப்பு, கொம்பு இசைக்க ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.